வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உட்பட, 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. தொற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ள நாடுகளில், நோய் பரவுவதை கட்டுக்குள் வைக்க, கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான இந்த நிதியுதவி, ஆய்வகங்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது. மேலும், நமது அண்டை நாடுகளான இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர் வங்கதேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர், ஆப்கானிஸ்தானிற்கு 5 மில்லியன் டாலர் வரை நிதியுதவி அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அதிகாரி போனி கிளிக், 'உலக சுகாதாரத்தை வழிநடத்துவதில், அமெரிக்காவின் சாதனையாக இந்த நிதியுதவி இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக, உலக நாடுகளின் பொது சுகாதரத்திற்கு, அதிக உதவிகளை வழங்கிய நாடாக அமெரிக்கா உள்ளது. பல உயிர்களை காப்பாற்றியுள்ளோம், நோய்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாத்துள்ளோம்.' என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வீடுகளில் உள்ளனர். உலகளவில் இது மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னையிலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இல்லையென்றால் பொருளாதாரத்தை சீர்செய்வது கடினமாக இருக்கும். இந்தப் பின்னணியில் தான் ஆபத்து அதிகம் உள்ள நாடுகளுக்கு கூடுதல் நிதியுதவி அளித்துள்ளது அமெரிக்கா.